சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
அவினாசி,
அவினாசி ஒன்றியம் தெக்கலூரில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப்பணி மேற்கொண்டனர். இதில் தெக்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் ரோட்டில் மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த வழிவகையும் செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் எல்லை வரை கட்டி பாதியில் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த ரோட்டில் வங்கி, உயர்நிலைப்பள்ளி, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளது மற்றும் இந்த வழியாக சென்னிமலை கவுண்டன்புதூர், புதுநல்லூர், சூரிபாளையம், காந்திநகர், செங்காலிபாளையம், கோவிந்தாபுரம், திம்மனையாம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு ஏராளமான வாகனங்கள் போய் வருகின்றன. அந்தப்பகுதியில் வருடகணக்கில் தண்ணீர் வெளியேறாமல் சாக்கடை போல் தேங்கி நிற்பதால் துர் நாற்றம் வீசுவதுடன் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நோய் பாதிப்புக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து கூறுகையில் பலமுறை நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகவும் பொதுமக்கள் நலன்கருதி நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக, போக்குவரத்து மிகுந்த ரோட்டில் மாத கணக்கில் குட்டைபோல் தேங்கி நிற்கும் தண்ணீரை நிரந்தரமாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story