தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 15 Dec 2021 11:30 PM IST (Updated: 15 Dec 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரசு பள்ளி சுவற்றில் சுவரொட்டிகள்
திருச்சி மாவட்டம், முசிறியில்  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் தனியார் மற்றும் கட்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்றி சுவற்றில் கல்வி சார்ந்த வரைபடங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற ஓவியங்கள், திருக்குறள் , பழமொழிகள் ஆகியவற்றை எழுத வேண்டும். மேலும் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசாருதீன், முசிறி, திருச்சி

சுகாதார சீர்கேடு
திருச்சி 15-வது வார்டு சத்தியமூர்த்தி நகர், அந்தோணியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்படுத்து வதற்கு பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் நிரம்பி தெரு மற்றும் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால்  அப்பகுதி பொதுமக்கள் , பள்ளி மாணவ-மாணவிகள் தெருவில் நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சத்தியமூர்த்தி நகர்


குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் திருச்சி தீரன் நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் மழைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், தீரன் நகர், திருச்சி.


ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே  எம். களத்தூர் பகுதியில் மருதம்பட்டி செல்லும் பிரிவு சாலை அருகே மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளத. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயந்துக் கொண்டே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழிப்பு ஏற்படும் முன் அபாயகரமான இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 
பொதுமக்கள், காட்டுப்புத்தூர், திருச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா மருங்காபுரி ஒன்றியம், பழுவஞ்சி கிராமம் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், பழுவஞ்சி திருச்சி


பள்ளி வளாகத்தில் கோழி இறைச்சிகள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் மர்மநபர்கள் கோழி இறைச்சிகளை கொட்டி வருகின்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கோழி இறைச்சிகளை கொட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், புத்தாநத்தம், திருச்சி

நாய்-மாடுகளால்  தொல்லை
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் நாய்கள் மற்றும் மாடுகள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் படுத்து  உறங்குகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்று வருகிறது. இரவு நேரங்களில் வேலை முடித்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுப்புலெட்சுமி, திருச்சி


தேங்கி நிற்கும் தண்ணீர்
திருச்சி மாவட்டம், லால்குடி ஓம் சக்தி கோவில் பின்புறம் முதல் சாலையில் அடிபம்பு ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அடிபம்பில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் பம்பின் உள் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே தண்ணீர் வெளியேற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், லால்குடி, திருச்சி


Next Story