ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு


ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Dec 2021 11:53 PM IST (Updated: 15 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஏரி ஆக்கிரமிப்பு

கண்ணமங்கலம் ஏரியையொட்டி நிலம் வைத்துள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏரியின் கரையை ஆக்கிரமித்து திருமண மண்டபங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள் ஆகியவற்றை கட்டி உள்ளனர். 

கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை சீரமைப்பு செய்தபோது, ஏரியின் நீர் பிடிப்பு அளவை குறைத்து, உபரிநீர் வழிந்தோடும் பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் சுவரை அமைத்துள்ளனர்.

கண்ணமங்கலம் ஏரியில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏரியின் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால், கட்டிடங்களை இடிப்பதற்கும், கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தவும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வருகின்றனர். 

வருவாய் ேகாட்டாட்சியர் ஆய்வு

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில், கண்ணமங்கலம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்ற நேற்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஆரணி தாசில்தார் பெருமாளிடம், கண்ணமங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுசம்பந்தமாக அனைத்து விவரங்களையும் உடனடியாக வழங்க, உத்தரவிட்டார். 

ஆய்வின்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதாவிடம், கட்டிட உரிமையாளர் ஒருவர் குறுக்கிட்டுப் பேசியதற்கு, அதிகாரி கண்டனம் தெரிவித்தார். 
ஆய்வின்போது ஆரணி தாலுகா நில அளவையர் சரவணன், மண்டல துணைத் தாசில்தார் மேனகா, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story