வேலூர் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து. நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
தீ விபத்து
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ பிரிவுகளில் வந்து காத்திருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் உள்ள கண் சிகிச்சை அறையின் வெளிப்புற சுவரில் உள்ள மின் வயரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு திடீரென மின்வயர்கள் தீப்பற்றியது. அந்த இடத்திலிருந்து புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் உள்ள பல இடங்களுக்கும் இந்த தீ பரவியது. மின் வயர்களிலிருந்து புகைமண்டலம் எழுந்தது.
அலறியடித்து ஓட்டம்
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைந்து வந்து அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு மின்சார வயரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அந்த கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து மின்சார வயர்கள் சீரமைக்கும் பணி நடந்தது. சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு வயர்கள் சீரமைக்கப்பட்டு புற நோயாளிகள் பிரிவில் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story