ரத்தினகிரி அருகே நண்பனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ரத்தினகிரி அருகே மது வாங்கி தராததால் நண்பரை குத்திக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ராணிப்பேட்டை
ரத்தினகிரி அருகே மது வாங்கி தராததால் நண்பனை குத்திக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வாலிபர் கொலை
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகில் உள்ள தென்நந்தியாலம் காலனி ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோட்டாபாய் (வயது 32). இவரும், நண்பர்களான மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நண்பர் முகம்மது ரபீக் (20), மகபூப்பாஷா (35) ஆகியோரும் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி தென்நந்தியாலம் பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகில் மது குடித்தனர்.
அப்போது இன்னும் கூடுதலாக மது வாங்கி தரச்சொல்லி முகம்மது ரபீக்கை, மகபூப்பாஷா வற்புறுத்தினார். அதற்கு, முகம்மதுரபீக் இப்போது தன்னிடம் பணம் இல்லை, நாளைக்கு மதுபானம் வாங்கி தருகிறேன், என்றார். அதை ஏற்காத மகபூப்பாஷா அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதில் ஆத்திரம் அடைந்த மகபூப்பாஷா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து முகம்மதுரபீக்கை குத்திக் கொலை செய்தார். கொலை சம்பவம் தொடர்பாக ரத்தினகிரி போலீசார் மகபூப்பாஷாவை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை
கொலை தொடர்பான வழக்கு விசாரணை ராணிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால்சுரேஷ் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார்.
மகபூப்பாஷா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கர் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story