கண்டனூர் கதர் கிராம தொழிற்சாலையில் 200 பெண்கள் கூடுதலாக பணியாற்ற நடவடிக்கை-கலெக்டர் தகவல்
காரைக்குடி அருகே கண்டனூரில் இயங்கி வரும் கதர் கிராம தொழிற்சாலையில் 200 பெண்கள் கூடுதலாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே கண்டனூரில் இயங்கி வரும் கதர் கிராம தொழிற்சாலையில் 200 பெண்கள் கூடுதலாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள கதர் கிராம தொழிற்சாலையை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாங்குடி எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
தொழிற்சாலையில், சோப் ஆயில் தயாரிக்கும் பிரிவு, குளியல் சோப் தயாரிக்கும் பகுதி, காலணிகள் தயாரிக்கும் பகுதி, கதர் வாரியத்துறையின் மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் தரைவிரிப்பு மற்றும் பனை ஓலை நாரில் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பகுதிகளை பார்த்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது-
200 பெண்களுக்கு வேலை
கதர் கிராம தொழில்கள் வாரியத்தின் மூலம் இந்த ஆலையில் இருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சோப் ஆயில் மற்றும் குறிஞ்சி குளியல் சோப் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் தற்போது கூடுதலாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் தரைவிரிப்பு மற்றும் பனை ஓலையால் செய்யப்படும் அழகுசாதன பொருட்கள், வண்ண வண்ண வயர் கூடைகள் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ஆலையில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் 200 பெண்கள் பணியாற்றும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஆய்வின் போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வானதி, கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை உதவி இயக்குனர் குமார், கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை செயலாளர் தேவராஜ், வாரியத்துறை தொழில் நுட்ப வல்லுனர் சந்தானமூர்த்தி, தாசில்தார் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story