அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை,
ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தகோவில் முன்பு தெப்பக்குளம் ஒன்று உள்ளது. ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலையின் மேல் மழை பெய்யும் பொழுது அந்த மழைநீர் இந்த தெப்பக்குளத்தில் வந்தடைந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி நிற்கும்.
தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கும் ஆண்டு தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2006-ம் ஆண்டு இக்கோவிலில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறையாததால் தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை.
சிறப்பு அலங்காரம்
இந்தநிலையில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அய்யர்மலை கோவில் தெப்பக்குளம் நிறைந்து வழிந்தோடியது. இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை அய்யர்மலை அருகேயுள்ள சிவாயம் சிவபுரீசுவரர் கோவிலிருந்து சந்திரசேகரர் (உற்சவ சிவன்) அம்பாளுடன் அய்யர்மலை கோவில் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தெப்பத்திருவிழா
இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் எடுத்துவரப்பட்டு தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் வைக்கப்பட்டது. இந்த குளத்தில் தெப்பமானது 3 முறை வலம் வந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story