பாரம்பரியம், அறிவியல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததே புதிய கல்விக்கொள்கை - கவர்னர் ஆர்.என்.ரவி
பாரம்பரிய கல்வி-அறிவியல் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததே புதிய கல்விக்கொள்கை என்று நெல்லை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று 28-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பிச்சுமணி வரவேற்று பேசினார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவுப்புல கழக இயக்குனர் அஜயகோஷ் பட்டமளிப்பு உரையாற்றினார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்தி பேசினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 1,374 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்கவர்கள்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இந்த பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்கவர்களை உருவாக்கி உள்ளது. நெல்லை பகுதியை சேர்ந்தவர்கள் கலாசாரம், ஆன்மிகம், நாட்டுப்பற்று, அரசியலில் பெருமை சேர்த்து உள்ளனர். பாரதியார் தனது பாடல்கள் மூலம் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வங்கமொழி கவிஞர் வந்தே மாதரம் எழுதியது போல் இங்கு பாரத மாதா குறித்து பாரதியார் எழுதினார்.
வ.உ.சி. சுதந்திர போராட்ட காலத்தில் புரட்சியாளராக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் நெல்லை பகுதியில் ஆங்கிலேய ஏகாதியபத்தியத்துக்கு எதிராக போராடினார். செண்பகராமன் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் முழங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றினார். விவேகானந்தருக்கு சைவ சித்தாந்தம் குறித்து சுந்தரனார் பாடம் சொல்லி கொடுத்துள்ளார். அவரது பெயரில் உள்ள இந்த பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக்கொள்கை ஆராய்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது. தொன்மையான பொருட்களை ஆய்வு செய்வது மட்டும் இதன் நோக்கமாக இல்லாமல், அப்போதையை அறிவார்ந்த சமூகத்தை வெளிக் கொண்டுவருவதும் நமது கடமை. இதைத்தான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது.
பாரம்பரிய கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்ததாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. பல ஆண்டுகளாக வெளிநாட்டு ஆதிக்கத்தில் இருந்தோம். அதனால் நமது பாரம்பரிய கல்வி மீது நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மேற்கத்திய கல்வியை ஏற்றுக்கொண்டு உள்ளோம். அதுதான் சரியானது என நினைக்கிறோம். இது பகுத்தாய்வும் தன்மையை கொண்டது.
அதே நேரத்தில் நமது பாரம்பரியமான பகுத்தாய்வு தன்மையையும் ஏற்றுக்கொண்டு உள்ளுணர்வு சார்ந்த ஒரு அறிவும் உண்டு. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து பார்க்கும் அணுகுமுறையை தேசிய புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்துள்ளது.
உதாரணமாக நாம் தற்போது புதிய மருத்துவத்தை பயன்படுத்துகிறோம். நம்மிடம் பழங்கால சிகிச்சை முறையும் உள்ளது. இவை இரண்டையும் ஒருங்கிணைப்பது போல் புதிய கல்விக்கொள்கை உள்ளது. புதிய கல்விக்கொள்கை புதிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த வகையில் தமிழக அரசை மிகவும் பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களுக்கு அதிகளவு ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக நிதி உதவி செய்கிறது.
கடுமையாக உழைக்க வேண்டும்
மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது அர்ப்பணிப்பு, திறமைக்கான அடையாளம்தான் இந்த சான்று. மேலும் உங்களுக்கு பல முன்னேற்றங்கள் உள்ளன. அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குறிக்கோளை எட்டும் வரை தளர்ச்சி அடையக்கூடாது. பட்டம் பெற்றுள்ள அனைவரும் வாழ்வில் முன்னேற வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்த கவர்னர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். முடிவில் நன்றி வணக்கம், வாழ்க தமிழ், ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
குழு புகைப்படம்
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, பதக்கங்கள் பெற்ற 204 மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story