திருவள்ளுவர் சிலை பராமரிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் - எஸ்.ஆர்.ராஜா
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறினார்.
நாகர்கோவில்,
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறினார்.
தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ.) தலைமையில் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), தமிழரசி (மானாமதுரை), நாகைமாலி (கீழ்வேளூர்), நிவேதா முருகன் (பூம்புகார்), பாலாஜி (திருப்போரூர்), ரூபி ஆர்.மனோகரன் (நாங்குனேரி) ஆகியோர் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்கூட்ட அரங்கில், சட்டசபை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு எஸ்.ஆர்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் கட்டமாக வெளி மாவட்டத்திற்கு வந்துள்ளோம்.
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் உள்ள படகுகள் குறித்தும், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளையும் பார்வையிட்டோம். திருவள்ளுவர் சிலை கடந்த 10 ஆண்டுகளில் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துக் கூறி இருக்கிறோம்.
அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நிச்சயமாக திருவள்ளுவர் சிலையினை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒட்டிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பொது மேலாளர் உள்பட துறை அலுவலர்களுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அங்கு உள்ள மணலை எடுத்து ஆய்வு செய்ததில் சுற்றுச்சூழல் குறைபாடு இல்லை. மேலும் மணலை பிரித்து எடுத்த பின்னர் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பது தெரிந்துக்கொண்டோம்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் நிலுவையில் உள்ள தணிக்கை குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிலுவையில் உள்ள தணிக்கை குழுவின் அறிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3 கோடி விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ராஜா கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல்மங்கை, தமிழ்நாடு சட்டசபை குழு அதிகாரி ரவிசந்திரன், சார்பு செயலாளர் வளர்வேந்தன், திட்ட இயக்குனர்கள் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மகளிர் திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழுவினர் நேற்று கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறைக்கு சென்றனர். அவர்களை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் முத்துராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து இக்குழுவினர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story