தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சி இருமடங்கு உயர்ந்துள்ளது - அமைச்சர் பொன்முடி


தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சி இருமடங்கு உயர்ந்துள்ளது - அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:00 AM IST (Updated: 16 Dec 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சி சதவீதம் இருமடங்காக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும் ேபாது கூறியதாவது:- 

இருமடங்கு வளர்ச்சி

இந்தியாவில் தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சி சதவீதம் இருமடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் உயர் கல்வி கற்போர் சதவீதம் 21.1 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் 41.4 சதவீதமாக இருக்கிறது. தொடக்க கல்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் போட்ட அடித்தளமும், அதை தொடர்ந்து கருணாநிதியின் நடவடிக்கையும் இதற்கு காரணம் ஆகும்.

தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வியை மேம்படுத்தி வருகிறார். கல்வி வளர்ச்சிக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் கல்வி கொள்கையை மேம்படுத்த கல்வி வல்லுனர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழுக்கு முக்கியத்துவம்

கல்வி வளர்ச்சியில் நாம் முழுமையாக வளர வேண்டும். சர்வதேச தரத்துக்கு ஏற்ப கல்வி தரத்தை வளர்க்க வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி வந்த பிறகு அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளனர். நமக்கு பிற மொழி மீது வெறுப்பு கிடையாது. ஆனால், நமது தாய்மொழி வளர வேண்டும். அதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தமிழுக்கு ஒரு தாள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2 மொழி மட்டுமே இருக்கிறது. மக்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கு தடை கிடையாது.

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அதிகளவு பட்டங்கள் பெறுகின்றனர். கடந்த சில நாட்களில் 4 பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்று உள்ளேன். அதில் பட்டம் பெற்ற பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 204 பேர் பதக்கம் பெற்றிருப்பதில் 27 பேர் மட்டுமே ஆண்கள். சமுதாயத்தில் கல்வியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதான் உயர்க்கல்வியின் உண்மையான நோக்கம் ஆகும். பி.எச்.டி. முனைவர் பட்டம் பெற்றதில் ஆண்கள் 364 பேரும், பெண்கள் 673 பேரும் உள்ளனர். நான் படித்த போது 10 பேர் மட்டுமே முனைவர் பட்டம் பெறுவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் முனைவர் பட்டம் பெறுகிறார்கள்.

ஆசிரியர்கள் படிக்க வேண்டும்

கல்வியில் மேம்பாடு அடைய மாணவர்களைவிட ஆசிரியர்கள் தான் அதிகம் படிக்க வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படித்து தேர்ச்சி பெற்று விடலாம். ஆனால், மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் அதிகமாக படிக்க வேண்டும். மேலும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களை வரவழைத்து கல்லூரி ஆசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிஉள்ளார். வரும் காலத்தில் பாடங்களை மாற்ற வேண்டும். ஆய்வு தொடர்பான படிப்பாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story