வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வாலிபர் பலி
ஆத்தூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 36). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கிருஷ்ணன் நேற்று இரவு வேலை முடிந்து ஆத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரி சக்கரத்தில் கிருஷ்ணன் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியை சேர்ந்த குப்புராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விபத்தில் பலியான கிருஷ்ணனுக்கு உமாதேவி (35) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்து
இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள குண்டாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (28). இவரது அக்காள் ஆண்டியம்மாள் (40). இவருக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரின் மகளான செல்வி (12) என்ற சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பழனிசாமி தனது அக்காள் ஆண்டியம்மாளையும், செல்வியையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நேற்று மாலை திண்டுக்கல் அருகே எரியோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் 3 பேரும் குண்டாம்பட்டி நோக்கி திரும்பினர்.
எரியோட்டில் உள்ள பழைய கரூர் சாலையில் அவர்கள் சென்றபோது, பின்னால் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஆண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த செல்வி, பழனிசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story