தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:41 AM IST (Updated: 16 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பயன்படாத குடிநீர் குழாய்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அந்த குழாய் சேதமடைந்து இருப்பதால் பயணிகள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி அந்த குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும்.
-ராம், சேலம்.
குப்பைகளை எரிக்கக்கூடாது
சேலம் மல்லமூப்பம்பட்டி 8-வது வார்டு சித்தனூர் பகுதியில் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளிப்பதுடன், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. மேலும் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை. எனவே குறிப்பிட்ட பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் தினமும் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சித்தனூர், சேலம்.
கற்கள் அகற்றப்பட வேண்டும்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நடூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நெடுஞ்சாலை அருகே கற்கள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பாம்புகள் வசிக்கும் இருப்பிடமாக காட்சி அளிக்கிறது. மேலும் சில நேரங்களில் பாம்புகள் பள்ளிக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி விரைவில் அங்கு குவிக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், நடூர், தர்மபுரி.
நோய் பரவும் அபாயம்
சேலம் சின்னதிருப்பதி காமாட்சி நகர் பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அள்ள செய்ய வேண்டும்
-காமாட்சி நகர் மக்கள், சேலம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி 3-வது வார்டு தங்கமாபுரிபட்டினம் வ.உ.சி. மைதானம் எதிரில் குப்பைத்தொட்டி இல்லாததால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து அதிகம் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சி.ரசிகபிரியா, தங்கமாபுரிபட்டினம், சேலம்.
ஆபத்தான மரம்
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி 12-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் முதல் வீதியில் சாக்கடை நீர் போகும் கால்வாயில் பெரிய அரசமரத்தின் வேர்கள் அடைத்துக்கொண்டுள்ளது. மேலும் வேகமாக காற்று அடித்தால் அந்த மரம் வேருடன் சாயும் நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே மின்சார கம்பம் உள்ளதால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாக்கடை நீர் சரிவர செல்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே மாநராட்சி நிர்வாகம் அந்த மரத்தை அகற்றி சாக்கடை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ஊர் பொதுமக்கள், கோர்ட்டு ரோடு காலனி, சேலம்.
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் பஸ்களில் வரும் போது சுங்கச்சாவடி அருகிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ்களை நிறுத்தினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். எனவே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கிருஷ்ணகிரி.
குப்பை வண்டி வருமா?
சேலம் அஸ்தம்பட்டி 7, 8-வது வார்டுகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகளை வாங்க வீடுகள் தோறும் வண்டிகளில் வருவார்கள். கடந்த ஒரு வாரமாக குப்பைகளை வாங்குவதற்கு மாநகராட்சியில் இருந்து குப்பை வண்டி வர வில்லை. இதனால் வீடுகளில் குப்பைகள் தேங்கி உள்ளன. பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் குப்பை வண்டி வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.வேலாயுதம், சேலம்.

Next Story