தங்கமணி மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
தங்கமணி மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
சேலம், டிச.16-
சேலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி, இவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் 7 அதிகாரிகள் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
இந்த சோதனையின் போது தரணிதரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் யாரையும் வெளியே செல்லவும், இதேபோல் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரவும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனிடையே தரணிதரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது குறித்த தகவல் கிடைத்ததும் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 மணிக்கு நிறைவு
மேலும் அவர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உள்கட்சி தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தரணிதரன் வீட்டின் வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர். தரணிதரன் வீட்டில் மாலை 5 மணி வரை சோதனை நடந்தது. முடிவில் போலீசார் வீட்டில் இருந்து ஒரு பையை மட்டும் எடுத்து கொண்டு சென்றனர். அந்த பையில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சோதனையை முடித்து போலீசார் வெளியே வரும்போது, அங்கிருந்த அ.தி.மு.க.வினர் தமிழக முதல்-அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சேலத்தில் உள்ள தரணிதரன் அலுவலகம், சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள தங்கமணியின் நண்பரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலின் வீடு மற்றும் நட்சத்திர ஓட்டல் என 4 இடங்களில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story