முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
பள்ளிபாளையம், டிச.16-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி (வயது 60).
தற்போது, குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் அவர், அங்குள்ள கோவிந்தம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மனைவி, மகன் மீதும் வழக்கு
இவர் மின் துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை இவர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மனைவி சாந்தி (56), மகன் தரணிதரன் (32) ஆகியோரும் சிக்கியுள்ளனர். சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் மனைவி சாராவுடன் தரணிதரன் வசித்து வருகிறார். தங்கமணியின் மகள் லதாஸ்ரீ, கணவர் தினேஷ்குமாருடன் பள்ளிபாளையம் அருகேயுள்ள கலியனூரில் வசிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை, வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தலா 2 இடங்கள் உள்பட மொத்தம் 69 இடங்களில் நடைபெற்றது.
சென்னையில் 14 இடங்களில் சோதனை
குறிப்பாக, சென்னையில் மட்டும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கமணியின் அறை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், மதுரவாயல், எழும்பூர், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, பனையூரில் உள்ள உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது. அதில், பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம் சோதனை நடந்த இடம் அவரது சம்பந்தி சிவசுப்பிரமணியனின் வீடு ஆகும்.
இந்த சோதனை நடைபெற்றபோது, கோவிந்தம்பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கமணி இருந்தார். அங்கு மட்டும் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் உள்ள பூஜை அறை, சமையல் அறை, முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அறை, படுக்கை அறை என எல்லா இடங்களிலும் பணம், நகை, முக்கிய ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
எதையும் விட்டு வைக்கவில்லை
புத்தக அலமாரி, பீரோ, கட்டில், மெத்தை, சமையல் பாத்திரங்கள் என்று எதையும் சோதனையின்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விட்டுவைக்கவில்லை.
இதேபோல், சேலம் ராஜபுரம் பகுதியில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, சேலம் ஜங்சனில் உள்ள அஸ்வா பார்க் நட்சத்திர ஓட்டல் மற்றும் குரங்குசாவடியில் உள்ள ஓட்டல் உரிமையாளர் குழந்தை வேல் வீடு, மரவனேரியில் உள்ள உறவினர் வீடு, நாமக்கல் மாவட்டம் புதுப்பாளையம் காட்டூரில் உள்ள அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வீடு என லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.
ஆந்திரா, கர்நாடகா
இதேபோல், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
ஒரே நேரத்தில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களில் 69 இடங்களில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனை நடைபெற்றபோது, சென்னை எம்.எல்.ஏ. விடுதி உள்பட ஒரு சில இடங்களில் அ.தி.மு.க.வினர் கூடி, லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
ரூ.2 கோடி பணம்
இதற்கிடையே சோதனையில் சிக்கிய பணம், நகை, ஆவணங்கள் தொடர்பாக, நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தங்கமணி (வயது 60), முன்பு தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தபோது 23-5-2016 முதல் 31-3-2020 வரையிலான காலத்தில், தன் பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 மதிப்பிலான சொத்து சேர்த்ததாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 69 இடங்களில் (நாமக்கல் மாவட்டம் 33, சென்னை 14, ஈரோடு 8, சேலம் 4, கோவை, கரூர், பெங்களூரு தலா 2, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், ஆந்திர மாநிலம் சித்தூர் தலா 1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி சோதனையில், பணம் ரூ.2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458, தங்க நகைகள் 1 கிலோ 130 கிராம், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கணக்கில் வராத பணம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம், சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிக்கிய 5-வது நபர்
ஏற்கனவே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, 5-வது நபராக இந்தப் பட்டியலில் பி.தங்கமணி இணைந்துள்ளார்.
Related Tags :
Next Story