மின்வேலியில் சிக்கி காட்டுயானை செத்தது
ஹனூர் அருகே, சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை செத்தது. இதுதொடர்பாக தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கொள்ளேகால்: ஹனூர் அருகே, சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை செத்தது. இதுதொடர்பாக தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இரைதேடிவந்த காட்டுயானை
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா பி.ஜி.பால்யா அருகே திகட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி திகட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைவது அவ்வப்போது நடக்கிறது.
இதற்கிடையே அதேகிராமத்தை சேர்ந்த விவசாயியான சிவக்குமார் என்பவர் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று இரைதேடி திகட்டி கிராமப்பகுதிக்குள் புகுந்தது.
மின்வேலியில் சிக்கி செத்தது
அப்போது காட்டுயானை, சிவக்குமாரின் தோட்டத்திற்குள் நுழைய மின்வேலியை மிதித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் காட்டுயானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே காட்டுயானை செத்து மடிந்தது. நேற்று காலை அப்பகுதி வழியாக வந்தவர்கள் காட்டுயானை செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள், ஹனூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் வனப்பகுதியில் இருந்து தோட்டத்திற்கு இரைதேடி வந்த காட்டுயானை மின்வேலியில் சிக்கி செத்தது தெரியவந்தது.
மேலும் தோட்டத்தின் உரிமையாளரான சிவக்குமார், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததும், சம்பவம் அறிந்து அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து வேலியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வலைவீச்சு
பின்னர் மைசூருவில் இருந்து கால்நடை டாக்டரை வரவழைத்து செத்த காட்டுயானைக்கு உடற்கூறு பரிசோதனை நடத்தி உடலை அப்பகுதியியே குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவான சிவக்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர். மின்வேலியில் சிக்கி செத்த காட்டுயானைக்கு 30 வயது இருக்கும்.
Related Tags :
Next Story