விதிகளை மீறி வரும் கனரக வாகனங்கள்
சிவகாசி-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் அருகில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை கடந்து கனரக வாகனங்கள் வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் அருகில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை கடந்து கனரக வாகனங்கள் வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ரெயில்வே கேட்
விருதுநகரில் இருந்து சிவகாசி ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்கள் சிவகாசி-எஸ்.என்.புரம் ரெயில்வே கேட்டை கடந்து தான் வர வேண்டும். இந்த நிலையில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயில்கள் தினசரி வரும் போது இந்த பகுதியை கடந்து செல்ல ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும்.
இதற்கிடையில் மிகவும் குறுகிய சாலை என்பதால் இந்த நேரத்தில் கனரக வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்வதை தடுக்க காலை 8 மணி முதல் 9 மணி வரை 1 மணி நேரம் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து தடுப்பு கம்பிகளை வைத்துள்ளனர்.
அகற்றம்
இந்த நிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு அந்த வழியாக வந்த ஒரு கனரக வாகனம் போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியை அகற்றி விட்டு விதிமீறி அந்த சாலையில் சென்றது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் அந்த பாதையை கடந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியை கடந்து சென்ற வாகனங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானது. காலை நேரத்தில் அந்த பகுதியை கடந்த பல பள்ளிகளில் படிக்கும் எண்ணற்ற மாணவர்கள் செல்வதால் விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து இருந்த போதும் அத்துமீறி சென்ற சில கனரக வாகனங்களால் அந்த பகுதி யில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்தனர்.
நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் இருப்பதால் சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் தடுப்பு கம்பி வைத்துள்ள நிலையில் சிலர் விதிகளை மீறி அந்த பகுதியை கடந்து செல்வதால் விபத்து அபாயம் இருக்கிறது.
எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பாதையை பயன் படுத்தும் வாகன ஓட்டிகள் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story