ரூ.1 கோடி சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது
மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மைசூரு: மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசாருக்கு தகவல்
மைசூரு டவுன் மண்டிமொகல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புலிகேசி ரோடு 2-வது சாலையில் வசித்து வரும் ஒருவரிடம் இருந்து, சிலர் சந்தன மரக்கட்டைகளை விலைக்கு வாங்கி கொண்டு பெங்களூருவுக்கு சரக்கு வேனில் செல்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மைசூரு-பெங்களூரு சாலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், மண்டிமொகல்லா போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த சரக்கு வேனில் சந்தன மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1 கோடி மதிப்பு
ஆனால் அந்த சந்தன மரக்கட்டைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்களில் வேனில் வந்த 2 பேரிடமும் இல்லை. இதனால் அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வேனில் சந்தன மரக்கட்டைகளை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 700 கிலோ சந்தன மரக்கட்டைகளை போலீசார் வசப்படுத்தி கொண்டனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து ஒரு சரக்கு வேன், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் மண்டிமொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் கைதானவர்களின் பெயர், விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். கைதானவர்களுக்கு சந்தன மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story