அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு வரவேற்பு
செங்கோட்டை, தென்காசியில் அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவிலில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோத்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதில் தங்க வாள், தங்க கவசங்கள் மற்றும் கருப்பனுக்கு வெள்ளி அங்கி ஆகியன அடங்கும்.
இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று காலை கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாகனத்தில் செங்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் இருக்கும் வெற்றிவிநாயகர் கோவில் முன்பு கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து தென்காசிக்கு மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டது. தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இந்த ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்தனர். தென்காசியில் வரவேற்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆபரண பெட்டி வரவேற்பு குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன், அய்யப்ப சேவா சங்க தலைவர் அழகிரி, செயலாளர் மாடசாமி, ஆலோசகர் மாரிமுத்து, பொருளாளர் சுப்புராஜ், கவுரவ ஆலோசகர் ராமன், துணைத்தலைவர் எஸ்.பி.டி.ஏ.திருமலைக்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.
தென்காசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் பார்வையிட்டார். இதற்கான பணியில் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வரவேற்பு முடிவடைந்ததும் ஆபரண பெட்டி ஆரியங்காவு வழியாக அச்சன்கோவில் சென்றடைந்தது. கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
Related Tags :
Next Story