கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
பள்ளிபாளையம்:
கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
சோதனை நிறைவு
தமிழக மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் உள்ள தங்கமணி தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் வீடு உள்பட 33 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டில் காலையில் தொடங்கிய சோதனை இரவு 8.15 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த தங்கமணி காலை முதல் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், அ.தி.மு.க.வினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிறிது நேரம் பேசினார்.
பழிவாங்கும் செயல்
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- அ.தி.மு.க.வை பழி வாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வலு சேர்க்க கூடாது என்பதற்காக இது போன்று முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தி.மு.க.வில் உள்ளதால் என்னை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.
1,000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. தலைவருக்கு செந்தில் பாலாஜியின் சுயரூபம் தெரியவில்லை. அவரை பற்றி போக போக தெரிந்து கொள்வார். எனது வீட்டில் இருந்து ரூ.2.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தவறான தகவல் வெளியாகி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து ஒரே ஒரு செல்போனை மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கி லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றுள்ளனர். நான் நேர்மையாக உள்ளேன். எனவே எனக்கு கடவுள் துணை இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story