ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி மாநகராட்சியில் அடங்கிய 48 வார்டுகளிலும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் பெண்கள் சுமார் 380 பேர், கடந்த 2 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் பணி, கொரோனா தடுப்பூசி போடாதவர் கணக்கெடுப்பு பணி, கபசுர குடிநீர் வழங்குதல், குப்பைகளை அள்ளுவது, கொசு ஒழிப்பு பணி, காய்ச்சல் உள்ளவர்களை கணக்கெடுப்பு பணி, கணினியில் வேலை செய்வது, அலுவலக பணிகளில் ஈடுபடுவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு நாளைக்கு இவர்களுக்கு ஊதியமாக ரூ.300 வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இதில் பணியாற்றக்கூடிய 2 பெண்கள் குறித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு பரப்பியவரை கைது செய்ய வலியுறுத்தி ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், புதிய ராணுவ சாலையின் குறுக்கே நின்று மறியலிலும் ஈடுபட்டனர்.
ஆவடி போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் இதுபற்றி ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Related Tags :
Next Story