உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
33-வது கட்ட விசாரணை
தற்போது 33-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட கலெக்டர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, உயர் பதவியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன், சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் கலெக்டர்
இதன் தொடர்ச்சியாக நேற்று 4-வது நாளாக ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் ஆகியோர் ஒருநபர் ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநபர் ஆணையம் முன்பு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டரும், சுற்றுலாத்துறை இயக்குனருமான சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உள்பட 4 பேர் ஆஜராக உள்ளனர். இதில் முதல்கட்ட விசாரணை நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விசாரணை நடைபெறுகிறது.
----------------
Related Tags :
Next Story