லோடு ஆட்டோ-வேன் மோதல்; முதியவர் சாவு
குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ-வேன் மோதிக் கொண்டதில் காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ-வேன் மோதிக் கொண்டதில் காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
லோடு ஆட்டோ-வேன் மோதல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவரது மகன் முத்துகிருஷ்ணன் (27). இவர்கள் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் தர்மராஜ், முத்துகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (30) ஆகியோர் ஒரு லோடு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை சப்ளை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கருங்காளி அம்மன் கோவிலில் இருந்து உடன்குடி நான்கு முக்கு சந்திப்பில் லோடு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
அப்போது, அந்த பகுதியில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு வந்து கொண்டு இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோ-வேன் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் வந்த 3 பேரும், வேனில் வந்த ஜெகதீஸ் (30), சந்தோஷ் (33), பாப்பாத்தி (62), நடராஜன் (42), நவீன் (20), அசோக்குமார் (26), பழனிச்சாமி (60), தெய்வானை (55), ஜெசி (6), புகழேந்தி (15), சுஜிதா (37), பீரித்தி (32), லூர்துசாமி (35) ஆகிய 16 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
முதியவர் சாவு
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story