சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி


சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 16 Dec 2021 7:52 PM IST (Updated: 16 Dec 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி

ஊட்டி

ஊட்டி-குன்னூர் இடையே சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சாலை பழுது

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளை யத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. ஊட்டி-குன்னூர் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. ஏற்கனவே சாலை அகலப் படுத்தப்பட்டு மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. 

மழை அதிகமாக பெய்ததால் தலையாட்டுமந்து, நொண்டிமேடு, வட்டார போக்குவரத்து அலுவலக முன்பகுதி, சேரிங்கிராசில் மழை நீர் சாலைகளில் வழிந்தோடியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது.

மழைநீர் கால்வாய் 

ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாயில் மண் அடைத்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழுதடைந்த சாலையில் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையில் மழைநீர் செல்லாத வகையிலும், சாலை பழுது அடைவதை தடுக்க சாலையின் இருபுறத்திலும் மழைநீர் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பணி தொடங்கி நடந்து வருகிறது. 

தண்ணீர் அகற்றம் 

ஊட்டி-குன்னூர் இடையே நொண்டிமேடு, ஆவின் அலுவலக பகுதி, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. பின்னர் கான்கிரீட் போடப்பட்டு, கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இருபுறமும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. 

சில பகுதிகளில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதால் குழி தோண்டிய இடங்களில் தண்ணீர் பெருகி நிற்கிறது. இதனை மோட்டார் மூலம் வெளியேற்றிய பின்னர் பணி நடக்கிறது. சாலையோரம் தனியார் ஓட்டல், கட்டிடங்களின் மண் அகற்றப்படாமல் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

1,100 மீட்டர் தூரம் 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ் சாலை இடையே சாலையின் இருபுறமும் தலா 1,100 மீட்டர் நீளம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாயில் செல்லும் மழைநீர் ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் கலக்கும் வகையில் இணைத்து கட்டப்படுகிறது. இதன் மூலம் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதோடு, பழுதடைவது தடுக்கப்படும் என்றார்.


Next Story