ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது
பொதட்டூர்பேட்டையில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். உறவினராக நடித்து ‘அபேஸ்’ செய்தது அம்பலமானது.
நகையுடன் மாயம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 45). இவரது மனைவி ஜெய்தூன்பீ (40). இவர்களது மகள் ரூசிலா (21) என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. மகள் திருமணத்துக்காக ரூ.6 லட்சம் மதிப்புள்ள சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் என மொத்தம் 15½ பவுன் தங்க நகைகள் வாங்கி வைத்தனர்.
இந்தநிலையில் உறவினர் என கூறிக்கொண்டு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி முகம்மது (31) என்ற வாலிபர் 3 தினங்களுக்கு முன்பு சாதிக் பாஷா வீட்டிற்கு வந்து தங்கினார். இந்தநிலையில் நேற்று மாற்றுத்திறனாளியான அவர், வீட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளுடன் திடீரென்று மாயமானார்.
கைது
தங்க நகைகள் காணமால் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெய்தூன்பீ பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளுடன் மாயமான மாற்றுத்திறனாளி வாலிபரை வலைவீசி தேடினார்.
பள்ளிப்பட்டு மூன்று சாலை சந்திப்பில் காரில் மாற்றுத்திறனாளி ஹாஜி முகம்மது இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து உறவினராக நடித்து அபேஸ் செய்த அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்து திருத்தணி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story