கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்


கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 16 Dec 2021 9:31 PM IST (Updated: 16 Dec 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாதப்பிறப்பு, கிருத்திகையையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி: 

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மார்கழி மாதப்பிறப்பு என்பதால் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் மாதப்பிறப்பையொட்டி கலசபூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், விநாயகர் யாகம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

மாதப்பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக நடைதிறப்புக்கு முன்பே கோவில் வாசலில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில், படிப்பாதை என பாதைகள் மற்றும் தரிசன வழிகளிள் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

மேலும் இன்று மாத கிருத்திகை நாளாகும். இதையொட்டி இன்று பழனி முருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இதில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தங்கரத புறப்பாடு நடந்தது. அப்போது வெளிப்பிரகாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர்.


Next Story