கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 16 Dec 2021 9:52 PM IST (Updated: 16 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ 250 கோடி வர்த்தகம் பாதிப்பு

கள்ளக்குறிச்சி

மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டங்கள் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தி பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளது. தனியார் மயமாக்கினால் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் கூட வங்கிகளின் முதலாளியாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும், எனவே அந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்- அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ராமச்சந்திரன், சிவகுமார், கருப்பன், சுப்பிரமணியன், பழனி உள்பட 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாபாஜி நன்றி கூறினார். 

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்படவில்லை. வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டம் முழுவதும் ரூ.250 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருப்பதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story