கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா


கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா
x
தினத்தந்தி 16 Dec 2021 9:57 PM IST (Updated: 16 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நேற்று நடந்தது.

உடன்குடி:
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நேற்று நடந்தது.

கற்குவேல் அய்யனார் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கோவிலில் இந்த ஆண்டு கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் வில்லிசையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது. 

கள்ளர் வெட்டு திருவிழா

விழாவின் சிகர நாளான நேற்று கள்ளர் வெட்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

மாலை 4.45 மணியளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் என்ற இளநீரை வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. கோவில் பணியாளர்கள், பூசாரிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளர் என்ற இளநீரை பூசாரி வெட்டியதும், அதில் இருந்து சிதறிய தண்ணீர் தெறித்து செம்மணலில் விழுந்தது. அந்த புனித மணலை கோவில் பணியாளர்கள் சேகரித்தனர்.

நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் (வெள்ளிக்கிழமை) கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
நாளை (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் அலுவலகத்தில் கள்ளர் வெட்டு புனித மணல் பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story