மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானதும், தமிழர் திருநாளானதுமான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர்.
இதற்காக விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மும்முரம்
கடந்த ஆண்டு பெய்த மழையினால் மண் பானைகள் தயாரிப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 வாரங்கள் உள்ள நிலையில் இப்போதே விழுப்புரம் பகுதியில் மண்பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை நன்கு உலர வைத்து பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன்...
இதுபற்றி சாலைஅகரத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிடும் வகையிலும் இந்த ஆண்டு அரசு சார்பில் மண் பானைகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிபிறக்கும். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story