கூட்டுறவு மருந்து கடை திறப்பு விழாவில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க தி.மு.க. எதிர்ப்பு


கூட்டுறவு மருந்து கடை திறப்பு விழாவில்  அ.தி.மு.க.வினர் பங்கேற்க தி.மு.க. எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 10:08 PM IST (Updated: 16 Dec 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு மருந்து கடை திறப்பு விழாவில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சின்னாளபட்டி:
தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்து கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதன்பேரில் சின்னாளபட்டி பூஞ்சோலையில் கூட்டுறவு மருந்து கடை திறப்பு விழா நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான பாரதி முருகன், இயக்குனரான அ.தி.மு.க.வை சேர்ந்த பி.வி.நடராஜன் ஆகியோர் பங்கேற்க வந்து இருந்தனர். 
அப்போது மருந்து கடை திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுவதற்காக தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை கடையை விட்டு வெளியேற்றுமாறும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அதிகாரிகள், அபிராமி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் என்பதால் நாங்கள்தான் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம் என விளக்கம் அளித்தனர்.
இதனை தி.மு.க.வினர் ஏற்காமல் அ.தி.மு.க.வினர் வெளியே செல்ல வேண்டும் என கூறி கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து பாரதி முருகனும், நடராஜனும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குத்துவிளக்கேற்றி மருந்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் முருகம்பட்டியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் கோபிநாதன் அங்கு வந்து தங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க.வினர், இங்கு வந்து தண்ணீர் பிரச்சினையை பற்றி பேசுவதா என கூறி வாக்குவாதம் செய்ததுடன் அவரை தாக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்காக இருந்த போலீசார் கோபிநாதனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story