அரசு பள்ளி மைதானத்தில் எரித்து கொலை மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெரும்பாறை அருகே அரசு பள்ளி மைதானத்தில் எரித்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே பாச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரித்திகா (வயது 9). இவள் பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பிரித்திகா பள்ளிக்கு சென்றாள். காலை 11 மணிக்கு பிரித்திகா வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள். அதன்பின்னர் அவள் வகுப்பறைக்கு திரும்பி வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த சக மாணவிகள், பள்ளி வளாகத்தில் அவளை தேடினர். அப்போது விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் புதருக்குள் மாணவி பிரித்திகா தீயில் எரிந்து கருகி கிடந்தாள்.
அதுபற்றி கேள்விபட்டு சத்யராஜ் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு ஓடினார். அங்கு தனது ஆசை மகள் கருகி கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அப்போது மாணவியின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டது. உடனே மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
உறவினர்கள் குவிந்தனர்
இதையடுத்து மாணவி பிரித்திகாவின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மாணவி கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவியின் உடல் கொண்டு வரப்பட்டது. அதோடு 2 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதேநேரம் தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் ஏராளமானோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சாலை மறியல்-வாக்குவாதம்
மாணவி பிரித்திகா எரித்து கொல்லப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறினர். பின்னர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள சாலைக்கு அவர்கள் திரண்டு சென்று மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவியை எரித்து கொன்றவர்களை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
இந்த நிலையில் மாணவியின் மரணம் பற்றி அறிந்த பழனி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதனால் அவரும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதற்கிடையே மாணவியின் உறவினர்களுக்கு ஆதரவாக பா.ஜனதாவினரும் அங்கு வந்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேத பரிசோதனை
இதற்கிடையே மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னரே மாணவியின் உறவினர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து மாணவி பிரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. அதையடுத்து மாணவியின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் மாணவி பிரித்திகாவின் உடலை திண்டுக்கல் மின்மயானத்துக்கு எடுத்து சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story