விசைப்படகுகள் கரையோர மீன்பிடிப்பால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு
தொண்டி பகுதியில் விசைப்படகில் கரையோர மீன்பிடிப்பால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தொண்டி,
தொண்டி பகுதியில் விசைப்படகில் கரையோர மீன்பிடிப்பால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மனு
தொண்டி பகுதியில் நாகை மாவட்ட விசை படகு மீனவர்கள் வாரத்தின் 7 நாட்களும் மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் நாட்டு படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீனவர்கள், நம்புதாளை முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முதல்-அமைச்சர், மீன்வள துறை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோடியக்கரை முதல் ராமேசுவரம் வரை உள்ள பாக் ஜலசந்தி கடல் ஆழம் குறைவான பகுதியாக உள்ளது. தொண்டி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட நாட்டு வல்லங்கள், விசைப் படகுகள் மூலம் மீன் பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தம்
இதனால் இந்த பகுதியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இடையே வாரத்தில் 3 நாட்கள் விசை படகுகளும், 4 நாட்கள் நாட்டு படகுகளும் கடல் தொழில் செய்து கொள்வது என்ற ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை யாரும் மீறுவதில்லை. ஆனால் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் இந்த பகுதியில் வந்து வாரத்தின் 7 நாட்களும் மீன்பிடி தொழில் செய்வதுடன் கரை ஓரத்தில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு நாட்டு படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி செல்வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் அடிக்கடி பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து நாகை பகுதி மீனவர்கள் இது போன்ற செயல் களில் ஈடுபடுவதை கடலோர காவல் படையில் புகார் செய்தால் அவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் தான் செல்ல முடியும் என கூறி விடுகின்றனர். மீன் துறை கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
கடல் தொழில்
எனவே தமிழக அரசு நாட்டுப்படகு மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எல்லை மீறும் நாகை, காரைக்கால் விசைப் படகு மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கடல் தொழில் செய்ய அனுமதிப்பதுடன் விசை படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிப்பு என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story