ரூ 1500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு


ரூ 1500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:34 PM IST (Updated: 16 Dec 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். சேவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். சேவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டின்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் என 9 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தனர். இம்மாவட்டத்தில் 352 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. அந்த வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றார்கள்.
வங்கி பணிகள் பாதிப்பு
இந்த வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் காசோலை பரிமாற்றம், டெபாசிட், பணப்பரிவர்த்தனை, அன்னிய செலாவணி மாற்றம் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செயல் அதிகாரிகள் மட்டுமே வங்கியில் இருந்தனர். மற்றவர்கள் இல்லாததால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் மூலமாக ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட்டது. இதனால் நேற்று ஏ.டி.எம்.களில் பணம் இருந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெறுவதால் ஏ.டி.எம்.களில் இன்று பணம் இல்லாத நிலை ஏற்படும்..
ரூ.1,500 கோடி
இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுக்குழு மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன், கற்பகம், மகாதேவன், ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் தாராபுரம் ரோடு கனரா வங்கி முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலைநிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் கூறும்போது, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வங்கிகளின் சேவை என்பது மிகவும் முக்கியமானதாகும். நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Next Story