கடத்திச்செல்லப்பட்ட துப்புரவு தொழிலாளியை படுகொலை செய்த கும்பல்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கும்பலால் கடத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். உப்பளத்தில் அவருடைய உடல் மீட்க்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்,
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கும்பலால் கடத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். உப்பளத்தில் அவருடைய உடல் மீட்க்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளியை கடத்திய கும்பல்
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மறுகால்தலை காலனியைச் சேர்ந்தவர் அய்யப்பன். அவரது மகன் செல்லையா (வயது 22), துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அஞ்சுகிராமம் மயிலாடி காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் மதுரை வீரனுக்கும் (27) முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி குளச்சல் மீன்பிடி துறைமுக ஏல கூடத்தில் செல்லையா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது டெம்போவில் வந்த ஒரு கும்பல் அவரை திடீரென கடத்தி சென்றது. இது குறித்து அவரது தாயார் நாச்சியார் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மதுரைவீரன் சிலருடன் சேர்ந்து கடத்தியதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
ஒருவர் சிக்கினார்
ஆனால் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் கடத்தப்பட்ட செல்லையாவின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க ராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் போஸ்கோ, சணல்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் தனிப்படையினர் மதுரை வீரனின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில் அவரை மடக்கி பிடித்த தனிப்படையினர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முதலில் முன்னுக்கு பின் முரணமாக பேசியுள்ளார்.
திடுக்கிடும் தகவல்
பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதாவது, செல்லையாவை உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். மேலும் செல்லையாவை கொன்றது ஏன்? என்பது குறித்த தகவலையும் போலீசில் தெரிவித்துள்ளார்.
அதாவது முன்விரோதம் காரணமாக செல்லையா, மதுரை வீரனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 நாட்களுக்கு முன்பு மதுரை வீரனின் குடிசையை செல்லையா தீ வைத்து எரித்துள்ளார். இதனால் செல்லையாவின் மீதான ஆத்திரம் மதுரை வீரனுக்கு கொலைவெறியை ஏற்படுத்தியுள்ளது. அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
கொன்று உடல் வீச்சு
இதனால் உறவினர்களுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மதுரை வீரன், செல்லையாவை குளச்சலில் வைத்து டெம்போவில் கடத்தியுள்ளார். அப்போது அவருக்கு உடந்தையாக சிலர் இருந்துள்ளனர்.
பின்னர் திட்டமிட்டபடி செல்லையாவை கொன்ற மதுரை வீரன், உடலை வடக்குதாமரைகுளம் கணேசபுரம் அருகே உள்ள உப்பளத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியதை போலீசில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் செல்லையாவை கொன்று வீசிய இடத்தை காண்பிக்க மதுரை வீரனை அழைத்து சென்றனர். அங்கு அவர் இடத்தை அடையாளம் காட்டினார். செல்லையா உடல் முட்புதருக்கு இடையே கிடந்தது. பின்னர் உடலை போலீசார் மீட்டனர். மேலும் செல்லையாவை கொல்ல பயன்படுத்திய அரிவாளும் அதே பகுதியில் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர்.
4 பேருக்கு வலைவீச்சு
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக செல்லையா உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை வீரனை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடையதாக மதுரை வீரனின் தம்பி சாத்தையா, மனைவி பார்வதி, மைத்துனர் அய்யப்பன், நண்பர் சந்தோஷ் ஆகியோரையும் தேடிவருகின்றனர்.
கும்பலால் கடத்தப்பட்ட தொழிலாளியை கொன்று உடல் உப்பளத்தில் வீசிய சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story