நாமக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் ரூ.200 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
நாமக்கல்:
வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டு இருந்தன. இதனால் காசோலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ரூ.200 கோடி பணபரிவர்த்தனை
இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கன்வீனர் வேங்கட சுப்பிரமணியன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் மொத்தம் உள்ள 1,050 வங்கி ஊழியர்களில் 800 பேர் கலந்து கொண்டனர். இதனால் சுமார் 125 வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தன. முதன்மை மேலாளர் மற்றும் அதற்கு மேல் பொறுப்புகளில் உள்ளவர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் பங்கேற்க கூடாது. அவர்கள் வங்கிகளுக்கு சென்றபோதிலும் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். சேவையை பொறுத்தவரையில் நாளை (இன்று) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story