கரூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்-ரூ.15 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


கரூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்-ரூ.15 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 12:01 AM IST (Updated: 17 Dec 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.15 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

கரூர், 
வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளன.
இந்தநிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. அந்தவகையில் நேற்று நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் வங்கிகளில் பண பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. தனியார் மய மசோதாவை திரும்ப பெற வேண்டும். வங்கித்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மனோகரா கார்னர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய அதிகாரிகள் சங்கம் ரங்கன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம் உஷா உள்பட ஏராளமான வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பண பரிவர்த்தனை பாதிப்பு
கரூரில் நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்பட அனைத்து வங்கி பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மேலும், கரூர் மாவட்டத்தில் ரூ.15 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story