கரூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 120 விவசாயிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 120 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
காத்திருப்பு போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கரூர் பஸ்நிலையம் அருகே நேற்று மதியம் ஒன்று திரண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
உயர்மின் கோபுரம்
விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். எனவே தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டப்பணிகளை வழக்குகள் முடிவடையும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
தற்போது உயர்மின் கோபுரம் அமையும் இடத்திற்கான இழப்பீடு 100 சதவீதத்தை 200 சதவீதமாக உயர்த்தியும், கம்பி செல்லும் இடத்திற்கு 20 சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்தியும், நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டினை 2.75 மடங்குக்கு பதிலாக 10 மடங்கு கூடுதலாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.
மாத வாடகை
உயர்மின் கோபுரங்கள் திட்டத்திற்கு மாத வாடகை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை சாலையோரமாக கேபிளாக அமைப்பதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்து ஆவன செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
120 விவசாயிகள் கைது
இதையடுத்து, கோஷங்களை எழுப்பி கரூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.
இதனைதொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story