கொல்லிமலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட இளம்பெண் உடல்: உல்லாசத்துக்கு மறுத்ததால் தீர்த்து கட்டினேன்-கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்


கொல்லிமலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட இளம்பெண் உடல்: உல்லாசத்துக்கு மறுத்ததால் தீர்த்து கட்டினேன்-கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Dec 2021 12:07 AM IST (Updated: 17 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் எலும்புக்கூடாக இளம்பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில், உல்லாசத்துக்கு மறுத்ததால் அவரை தீர்த்து கட்டியதாக கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேந்தமங்கலம்:
இளம்பெண் மாயம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பரவாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவருடைய மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதியின் மகள் ரேணுகா (வயது 21). இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி பங்காரு விவசாய தோட்டத்தின் அருகே புதரில் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எலும்புக்கூடாக கிடந்தது காணாமல் போன ரேணுகா என்பது தெரியவந்தது. 
பரபரப்பு வாக்குமூலம்
எலும்புக்கூடை மீட்ட போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேணுகாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பிடாரன் மகன் ரஜினி (23) மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். 
இதையடுத்து போலீசார் ரஜினியை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் ரேணுகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
உல்லாசத்துக்கு மறுப்பு
நானும், ரேணுகாவும் காதலித்து வந்தோம். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கேட்டேன். அவரும் அதை கொடுத்தார். பின்னர் தான் நான், ரேணுகாவுக்கு சித்தப்பா முறை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரேணுகா என்னுடன் பழகுவதை தவிர்த்ததுடன், 5 பவுன் நகையை திருப்பி கேட்டார்.
சம்பவத்தன்று விவசாய தோட்டத்தில் நானும், ரேணுகாவும் சந்தித்தோம். அப்போது அவரை நான் உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், 5 பவுன் நகையை கேட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரது தலையை பிடித்து அங்கிருந்த பாறையில் அடித்துக்கொலை செய்தேன். இதையடுத்து உடலை புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story