சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சேலம், டிச.17-
தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட அனைத்து அரசுடமையாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிலும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கடைவீதி, அழகாபுரம், அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் அன்றாட சேவை அடியோடு முடங்கியது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்தும் சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.
வங்கி அதிகாரிகள் சங்க சேலம் மாவட்ட தலைவர் குணாளன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் சம்பத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
ரூ.1,000 கோடிக்கு பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நேற்று எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பணத்தை செலுத்தவும், எடுக்கவும் முடியாமல் அவதிப்பட்டனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.157 லட்சம் கோடி டெபாசிட் தொகை உள்ளது. இந்த தொகை பொதுத்துறை வங்கிகளின் கைவசம் இருந்தால் தான், அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். எங்களின் இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்ட போராட்டம்
வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி 1.50 லட்சம் பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 96 சதவீதம் பேர் இப்போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அளவில் ரூ.50 ஆயிரம் கோடிக்கும், சேலம் மாவட்ட அளவில் ரூ.1,000 கோடிக்கும் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story