அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தென்னலூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்கப்பட்டது.
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள தென்னலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. நேற்று மார்கழி முதல் நாள் என்பதால் இந்த கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. அப்போது கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து எவ்வித அனுமதியின்றியும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்தது. இதற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும் அழைத்து வரப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை காண பொதுமக்களும் கோவில் திடலுக்கு வரத் தொடங்கினர்.
தடுத்து நிறுத்தம்
இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை அழைத்து அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் தென்னலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story