சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று பெண்ணாடம் அருகே பொன்னேரியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள், அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பழனிவேல் (வயது 60), விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் பாலா என்பதும், இவர்கள் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம், முகுந்தநல்லூர், கோவிலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்த குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை மாட்டு தீவனத்திற்காக அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், பாலா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வாகனம் மற்றும் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story