தனியார் மதுபான ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஊழியர் மர்ம சாவு காரணமாக தனியார் ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோடடை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை ஊராட்சியில் தனியார் மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்த சரண்ராஜ் (வயது 30) என்பவர் கடந்த 15-ந் தேதி தூக்குப்போட்டு தற்காலை செய்து காண்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் சரண்ராஜின் சொந்த ஊரான கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டங்கால் கிராமத்தில் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இணைந்து சரண்ராஜ் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இறந்த சரண்ராஜின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை சாலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதில், உடனடியாக தீர்வு காணப்படாததால் இரவு 7 மணி வரை சாலை மறியல் நீடித்தது. இதனால், பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அலுவலகத்திற்கு பணிக்கு சென்றவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளும் மாலை நடந்தே தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், தாசில்தார் புவியரசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், மதுபான ஆலை நிர்வாகத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், பொதுமக்களின் நலன்கருதி சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதற்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story