திருச்சி மத்திய மண்டல அளவில் குறைதீர்க்கும் கூட்டம்


திருச்சி மத்திய மண்டல அளவில் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:43 AM IST (Updated: 17 Dec 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய மண்டல அளவில் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி, டிச.17-
போலீசாரின் குழந்தைகளுக்கு வேலை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மத்திய மண்டல அளவிலான போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த போலீசாரின் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சியில் நேற்று காலை நடைபெற்றது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு 1,069 போலீசார் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அத்துடன், போலீசாரிடம் கோரிக்கைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்த அவர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். முன்னதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசும்போது கூறியதாவது:-
366 பேரின் தண்டனைகள் ரத்து
முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்த படி தமிழகத்தில் உள்ள 1 லட்சத்து 33 ஆயிரம் போலீசார் மீது இருந்த சிறு தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி ஏற்கனவே கொடுக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய பரிசீலனை செய்யும் படி என்னிடம்  கருணை மனுக்கள் வந்தன. கடந்த 5 மாதத்தில் 1,340 பேரிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டதில், 366 பேரின் தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட 51 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் பெண் காவலர்கள். உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட, மண்டல அளவில் போலீசாரின் குறைகள் கேட்கப்பட்டு 1,353 போலீசாருக்கு அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் உத்தரவு கடந்த வாரம் வழங்கி இருக்கிறோம்.
காவல்துறை பணி என்பது சவாலான பணி, போர்க்களத்தில் பணியாற்றுவது போல் தான். இதே திருச்சி சரகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உயிரை துச்சமாக மதித்து சினிமாவில் காட்டுவது போல், சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் குற்றவாளிகளை விரட்டிச்சென்று பிடித்துள்ளார். ஆனால் அவர்கள் அவரை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி விட்டனர். நானே 3 முறை துப்பாக்கி சண்டைபோட்டுள்ளேன்.
விரைவில் அரசாணை
உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் காவல்துறையில் காவலர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று தமிழக முதல் -அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 6 நாட்கள் வேலை 7-வது நாள் வேலை பார்த்தால் ஈட்டு ஊதியம் வழங்கதான் சட்டம் இருந்தது. அதை தற்போது, 5 நாட்கள் வேலை 6-வது நாள் சிறப்பு ஊதியம் 7-வது நாள் ஓய்வு என்று சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பஸ் பயணத்தின் போது நவீன அடையாள அட்டையை காண்பித்து நீங்கள் செல்லலாம் போன்ற அறிவிப்புகள் வந்துள்ளன. அதற்கான அரசாணை விரைவில் வரும். உங்களின் கோரிக்கைகளை முடிந்த அளவு தீர்க்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். 800 போலீசாரின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 800 பேருக்கு பணி வழங்க உள்ளோம்.
குழந்தைகளுக்கு வேலை
மேலும் போலீசாரின் குழந்தைகளுக்கு தனியார் மற்றும் அரசு துறையில் வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதுவரை 1,000 பேர் தங்கள் குழந்தைகளுக்கு வேலை கேட்டு மனு அளித்துள்ளனர். போலீசார் தங்கள் குழந்தைகளின் கல்வி தகுதி, செல்ல விரும்பும் வேலை போன்ற விவரங்களை ஐ.ஜி.யிடம் அளித்தால் அவர் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வார். அனைவரும் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி.க்கள் சரவண சுந்தர் (திருச்சி), பிரவேஸ் குமார் (தஞ்சை) மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

Next Story