மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்


மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:44 AM IST (Updated: 17 Dec 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 71 லட்சமாக அதிகரித்துள்ளது. எனவே மாணவர் களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்:
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 71 லட்சமாக அதிகரித்துள்ளது. எனவே மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மண்டல ஆய்வுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாநில திட்ட இயக்குனர் சுதன், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா வரவேற்றார்.
அமைச்சர் பேட்டி
கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் மேம்படுத்தப்பட வேண்டிய பள்ளிகள், மாணவர்களுக்கு தேவையான வசதிகள், ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்போது அது தொடர்பாக விவாதிக்கப்படும்.
இதேபோல் ஒவ்வொரு வாரமும் புதன், வியாழக்கிழமைகளில் ஒவ்வொரு பகுதியாக மண்டல ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும். பிப்ரவரி மாதம் 22-ந ்தேதி வரை இந்த கூட்டம் நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் சுழற்சி முறையில் நடந்து வருகிறது. ஜனவரி 3-ந் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை முழுநேர வகுப்பாக செயல்படும்.
ஆசிரியர்கள் நியமனம்
தஞ்சையில் உள்ள மாநகாட்சி பள்ளியை பார்வையிட்டேன். அங்கு சேதமடைந்த கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அங்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அது விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 
தமிழகத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 66 லட்சம் மாணவர்கள் இருந்தனர். தற்போது இது 71 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், டி.ஆர்.பி.ராஜா, முத்துராஜா, கண்ணன், நிவேதா முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் திடீர் ஆய்வு
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடியதோடு, அங்குள்ள சுகாதார வளாகம் மற்றும் பள்ளிக்கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story