தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:51 AM IST (Updated: 17 Dec 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து தஞ்சையில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து தஞ்சையில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 16, 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 300 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சில வங்கிகள் மூடிக்கிடந்தன. தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவி பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, இந்தியன் வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் குருநாதன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க தஞ்சை கிளை செயலாளர் விஜயராஜன் மற்றும் ஏராளமான வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
3 ஆயிரம் பேர் பங்கேற்பு
இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் 300 வங்கி கிளைகளை சேர்ந்த 3 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் நேற்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை போடுதல், டி.டி.அனுப்புதல் போன்ற பல்வேறு வர்த்தக பரிவர்த்தனையில் ஈடுபட முடியாமல் அவதி அடைந்தனர்.
மேலும் ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றபடி இருந்தனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நேற்றும், இன்றும் என 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடப்பதால் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதன் காரணமாக சில ஏ.டி.எம்.களில் பணம் விரைவில் தீர்ந்தது. இந்தஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்டேட் வங்கியின் விஜயராகவன், வினோத், முருகையன், தீபா, ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story