இல்லம் தேடி கல்வி திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்
இல்லம் தேடி கல்வி திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கலெக்டர் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் இல்லம்தேடிகல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கலெக்டர் மேகநாத ரெட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதனை தற்போது செயல்படுத்தி வருகிறோம். விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். எனவே இந்த பயிற்சிக்கு வந்துள்ள அனைவரும் இத் திட்டத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு மாணவர்களுக்கு திட்டத்தின் நோக்கத்தை புரிய வைத்து பெரிய அளவில் மாணவர்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பயன் பெற செய்ய வேண்டும். மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.எனவே ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக மாணவர்களுக்கு வழங்கி ஒத்துழைப்பு நல்கி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 6,254 நபர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக 132 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜமுனாராணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்தையா, முனியசாமி, திருப்பதி, இந்திராணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், மணிகண்டராஜா, கோபால கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story