கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:35 AM IST (Updated: 17 Dec 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

பெங்களூரு: கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நாட்டிலேயே முதல் பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 2-வது அலை ஓய்ந்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.  இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் 3-வது அலை உருவானதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் கொரோனா உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. 

 இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் நாட்டிலேயே முதலாவதாக கடந்த 1-ந்தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

 அதில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயது முதியவர் ஆவார். மற்றொருவர் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரி டாக்டரான 43 வயது நபர் ஆவார். ஆனால் தென் ஆப்பிரிக்க முதியவர் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டார். 

டாக்டருக்கு தொடர் சிகிச்சை

இதையடுத்து டாக்டருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இன்னும் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீளவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 34 வயது வாலிபருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

அவரது சளி மாதிரி மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். 

லண்டன்-ஜெர்மனி

இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே லண்டனில் இருந்து வந்திருந்த 7 பேருக்கும், ஜெர்மனியில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், லண்டனில் இருந்து நேற்றுமுன்தினம் பெங்களூருவுக்கு வந்த 9 வயது சிறுவன், 18 மற்றும் 28 வயது வாலிபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் பவுரிங் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சளி மாதிரி ஆய்வு

அதே நேரத்தில் 3 பேரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய, அவர்களது சளி மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் பெங்களூருவில் வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை அறிக்கைக்காக மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்

இதற்கிடையே கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த தகவலை கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
லண்டனில் இருந்து வந்த 19 வயது வாலிபர், டெல்லியில் இருந்து வந்த 36 வயது நபர், 70 வயது பெண், நைஜீரியாவில் இருந்து வந்த 52 வயது நபர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 33 வயது நபர் ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு

இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விமான நிலையங்களில் பரிசோதனையை சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Next Story