அடுத்த ஆண்டு முதல் கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை அமல்
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மரணம் அடைந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சுவர்ண சவுதாவில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த கேள்வி நேரத்தில் உறுப்பினர் கவுஜலகி மகாந்தேஷ் சிவானந்த் பள்ளி கல்வித்துறை தொடர்பாக கேள்வி கேட்டார். அதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மழலையர் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்.
உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடபர்பாக உயர் அதிகாரிகளுடன் 4, 5 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம். மந்திரிசபையின் துணை குழுவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. கல்வித்துறை நிபுணர்கள் ஆலோசனை நடத்தி அறிக்கை ஒன்றை அரசுக்கு செலுத்தியுள்ளது.
கர்நாடக உயர்கல்வி கவுன்சில் துணைத்தலைவராக பணியாற்றிய ரங்கநாத் தலைமையில் 15 அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தகுழு அரசுக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்படும். தேசிய கல்வி கொள்கையை சரியான முறையில் அமல்படுத்தும் வகையில் ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story