போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தூக்குப்போட்டு சாவு
காதல் தொல்லை கொடுத்த வாலிபர் தற்கொலை நாடகமாடியதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார். வாலிபர், அவரது நண்பரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு: காதல் தொல்லை கொடுத்த வாலிபர் தற்கொலை நாடகமாடியதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார். வாலிபர், அவரது நண்பரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுப்பு
பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபிதரகல்லு பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி(வயது 24). இவரது மாமா பிரஜ்வல் ஆவார். சாக்ஷியை, அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அருணின் காதலை ஏற்க சாக்ஷி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சாக்ஷிக்கு, அருண் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆனாலும் அருணின் காதலை ஏற்க சாக்ஷி நிராகரித்து விட்டார். இந்த நிலையில, சாக்ஷியின் மாமாவான பிரஜ்வலுக்கு, பசவேசுவராநகர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அவர், அருண் தற்கொலைக்கு முயற்சி செய்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது தற்கொலைக்கு சாக்ஷி தான் காரணம் என்று கூறுகிறார், அருணை திருமணம் செய்தால், இந்த வழக்கில் இருந்து சாக்ஷி விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இளம்பெண் தற்கொலை
அருண் தற்கொலைக்கு முயன்றது குறித்து சாக்ஷியிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், பசவேசுவராநகர் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி பிரஜ்வல்லிடம், போலீஸ்காரர் என பேசிய நபர் தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய அவரும், இதுபற்றி சாக்ஷியை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அத்துடன் தான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்றும் பிரஜ்வல் கூறியுள்ளார்.
இந்த நிலையில், போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பயந்து போன சாக்ஷி தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பிரஜ்வல், மருமகள் சாக்ஷி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பீனியா போலீசார் விரைந்து வந்து சாக்ஷியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
2 பேர் கைது
அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் பிரஜ்வல் கூறினார். இதுபற்றி பசவேசுவராநகர் போலீசாரிடம், பீனியா போலீசார் விசாரித்த போது, அருண் என யாரும் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், போலீஸ் நிலையத்தில் இருந்து யாரும் பிரஜ்வல்லை தொடர்பு கொண்டு பேசவில்லை என்பதும் தெரியவந்தது. அதே நேரத்தில் அருணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சாக்ஷி தன்னை காதலிக்காததால், தனது நண்பர் கோபால் மூலமாக போலீசார் போல் பேசி தற்கொலைக்கு முயன்றதாக பொய் சொன்னதாக அருண் கூறினார்.
இதனால் அருண் தற்கொலை நாடகமாடியதால், போலீஸ் விசாரணைக்கு பயந்து சாக்ஷி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், அவரது நண்பர் கோபாலை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை நாடகமாடிய வாலிபரால், இளம்பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story