தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு சாவு
தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
போலீஸ் ஏட்டு
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வீராக்கன் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கடந்த 1999-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி முதல் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
மேலும் செல்வராஜ் தனது குடும்பத்துடன் பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்ததோடு, அங்கிருந்து பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் செல்வராஜின் மனைவி மாலதி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் செல்வராஜ் தனது மகள், மகனை கவனித்துக் கொண்டு பணிக்கு சென்று வந்தார்.
சாவு
மேலும் மனைவி இறந்த சோகத்துடன் காணப்பட்ட செல்வராஜ் கடந்த 12-ந்தேதி நள்ளிரவில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துண்டால் தூக்குப்போட்டு, உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story