தென் மண்டலத்திற்கான காவலர் குறைதீர்க்கும் முகாமில் 366 பேரின் தண்டனைகள் ரத்து


தென் மண்டலத்திற்கான காவலர் குறைதீர்க்கும் முகாமில் 366 பேரின் தண்டனைகள் ரத்து
x
தினத்தந்தி 17 Dec 2021 3:14 AM IST (Updated: 17 Dec 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

தென் மண்டலத்திற்கான காவலர் குறைதீர்க்கும் முகாமில் 366 பேரின் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

மதுரை
தென் மண்டலத்திற்கான காவலர் குறைதீர்க்கும் முகாமில் 366 பேரின் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
காவலர் குறைதீர்க்கும் முகாம்
காவல் துறை குறை தீர்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாநகர், மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டன. அதன்படி போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் மூலம் தீர்க்கப்படாத மனுக்களை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் நேரில் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை, நெல்லை மற்றும் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
டி.ஜி.பி. மனுக்களை பெற்றார்
இதில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு காவலர்களிடம் நேரிடையாக மனு பெற்று கொண்டார். அதில் இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை மொத்தம் 900 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் பெரும்பாலான மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவலர்களின் குறைகள் உடனே தீர்க்கப்பட்டது. ஏனைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசும் போது கூறியதாவது:-
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசாரின் குறைகள், தண்டனைகள் போன்றவை மாவட்டம் வாரியாக தீர்க்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மானிய கோரிக்கையின் போது போலீசாருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தார். அதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இவ்வாறு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் திருத்தம் செய்தது கிடையாது. அதன்படி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சட்டத்திருத்தம் செய்து வாரத்தில் 5 நாட்கள் வேலை, 6-வது நாள் அதிகப்படியான ஊதியம், 7-வது நாள் பணி ஒய்வு என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
366 பேரின் தண்டனை ரத்து
காவலர்களுக்கு கட்டப்படும் வீடுகள் முன்னர் வெறும் 375 சதுர அடியாக இருந்தது. தற்போது 750 சதுர அடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதவிர காவலரின் 3 ஏ தண்டனை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1,058 கருணை மனுக்களில் 366 மனுக்கள் மீது தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதில் பணி நீக்கம் செய்யப்பட்ட 51 பேர் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் 21 பேர் பெண்கள். மேலும் 1353 காவலர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கி உள்ளோம். மேலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற குறைகள் விரைவில் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் மதுரை மதிச்சியம் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பழனியாண்டியின் பணியை பாராட்டி அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, தென் மண்டல ஐ.ஜி. அன்பு, மதுரை டி.ஐ.ஜி.காமினி, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story